சென்னை: டில்லியில் ஜூன் 8ஆம் தேதி நடைபெற உள்ள ‘இண்டி’ கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தை தி.மு.க. புறக்கணிப்பதாக கட்சி தலைமை புதன்கிழமை அறிவித்தது.
காங்கிரஸ் கட்சி சட்டசபை தேர்தலுக்குப் பிறகு எடுத்த நடவடிக்கைகள் காரணமாக தி.மு.க. தொண்டர்கள் மனக்காயமடைந்துள்ளதாகவும், அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் கட்சி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் 28 தொகுதிகளில் போட்டியிட்டு ஐந்து தொகுதிகளில் வெற்றி பெற்றதாகவும், தேர்தலுக்குப் பிறகு தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு அளித்து கூட்டணி அமைச்சரவையிலும் இடம் பெற்றதாகவும் தி.மு.க. குறிப்பிட்டுள்ளது.
மேலும், ‘இண்டி’ கூட்டணி தொடங்கியதிலிருந்து தி.மு.க. மைய சக்தியாக செயல்பட்டதாகவும், கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் முக்கிய மக்கள் பிரச்னைகளில் தொடர்ந்து குரல் கொடுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் பங்கேற்கும் ஜூன் 8 கூட்டத்தில் தி.மு.க. கலந்துகொள்ளாது என்றாலும், கூட்டணியில் உள்ள பிற கட்சிகள் முன்வைக்கும் நாட்டுநலனை பாதிக்கும் விவகாரங்களில் தி.மு.க. தொடர்ந்து குரல் கொடுக்கும் என்றும் அறிக்கை தெரிவித்துள்ளது.





