தி.மு.க.வில் உதயநிதி ஸ்டாலின் ஆதரவாளர்கள், மூத்த நிர்வாகிகளுக்கு “ஓய்வு” அளித்து இளைஞர்களுக்கு முக்கிய அமைப்பு பொறுப்புகளை வழங்க வேண்டும் எனக் கட்சித் தலைமைக்கு அழுத்தம் கொடுத்ததாக அறிவாலய வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தல் தோல்விக்கான காரணங்களை கண்டறிய, தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கள ஆய்வு குழுவை அமைத்துள்ளார். அந்தக் குழு ஜூன் 10க்குள் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தகவலின்படி, ஸ்டாலின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் கோடை விடுமுறைக்காக மைசூரு அருகேயுள்ள குடகு மலைப் பகுதிக்கு சென்றிருந்த போது நடந்த ஆலோசனையில், முன்னாள் அமைச்சர் மகேஷ் உள்ளிட்ட சிலர் அமைப்பு மாற்றங்களை வலியுறுத்தினர். துணை பொதுச்செயலர் பதவிகளை இளைஞர்களுக்கு வழங்க வேண்டும், உடல்நலக் காரணங்களை முன்வைத்து துரைமுருகன் வகிக்கும் பொதுச்செயலர் பதவியில் மாற்றம் செய்ய வேண்டும், மேலும் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி வழங்க வேண்டும் என்பதும் அந்தக் கோரிக்கைகளில் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

மேலும், இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலர் என்ற வகையில் நியமனம் செய்ய வேண்டும் என்றும், மூத்த நிர்வாகிகளை வழிகாட்டுதல் குழுவில் மட்டுமே வைத்திருக்க வேண்டும் என்றும் உதயநிதி தரப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. அப்போது ஸ்டாலின் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. சென்னை திரும்பிய பின்னர் அறிவாலயத்தில் மூத்த நிர்வாகிகள் டி.ஆர். பாலு, கனிமொழி, எ.வ. வேலு உள்ளிட்டோருடன் இது தொடர்பாக அவர் ஆலோசனை நடத்தியதாகவும், கள ஆய்வு குழு அறிக்கைக்கு பின் நடவடிக்கைகள் எதிர்பார்க்கப்படுவதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.