திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில், தமிழக அரசு முதலில் தன் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
இந்த விவகாரம், 2025 டிசம்பர் 1 அன்று தனிநீதிபதி, வழக்கமான இடங்களுடன் சேர்த்து திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணிலும் தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவிட்டதிலிருந்து உருவானது. அந்த உத்தரவு நிறைவேற்றப்படவில்லை எனக் கூறி தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிறப்பிக்கப்பட்ட பல்வேறு உத்தரவுகளுக்கு எதிராக மேல்முறையீடுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
ஏப்ரல் 8 அன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தனிநீதிபதி உத்தரவுக்கு ஜூன் 4 வரை இடைக்கால தடை விதிக்கப்பட்டது. மேலும், தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான அரசின் நிலைப்பாடு மற்றும் பரிந்துரைகளை அடுத்த கட்ட விசாரணையில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அமர்வு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் மீண்டும் வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவு செய்ய இரண்டு வார அவகாசம் தேவை என அரசு தரப்பு தெரிவித்தது. மனுதாரர் தரப்பு அவகாசம் வழங்குவதில் ஆட்சேபனை இல்லை என கூறியது. தர்கா தரப்பு தங்களின் மேல்முறையீட்டை அனுமதிக்க வேண்டும் என கோர, அதற்கு மனுதாரர் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது.
நீதிபதிகள், தனிநீதிபதி உத்தரவு செல்லுமா, செல்லாதா என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கும் என குறிப்பிட்டனர். மேலும், இது ஜனநாயக நாடு; மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும், முதலில் அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு, வழக்கை ஜூன் 22க்கு ஒத்திவைத்தனர்.





