கேரள மாநிலத்தின் நிதி நிலை குறித்து, நிதித் துறையையும் கவனிக்கும் முதல்வர் வி.டி.சதீசன் நேற்று சட்டசபையில் வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்தார். அதில், மாநிலத்தின் மொத்த கடன் சுமை ரூ.5.07 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையின் படி, மாநில வருவாயில் 77% சம்பளம், ஓய்வூதியம் மற்றும் வட்டி செலுத்துதல் போன்ற செலவுகளுக்கே செலவாகிறது. இதில் வட்டி செலுத்துதலுக்கே 20.9% செலவாகுவதால், வளர்ச்சி பணிகளுக்கான நிதி கடுமையாக குறைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மாநிலம் அதிக நிதிப் பற்றாக்குறையை எதிர்கொள்வதாகவும், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூலதன செலவு வெறும் 1.3% மட்டுமே இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி உள்ளிட்ட நிலுவைகள் சேர்த்து ரூ.48,733 கோடி அளவிலான நிலுவை பொறுப்புகளை புதிய அரசு ஏற்றுள்ளதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
கேரள உட்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியத்தில் ரூ.21,000 கோடி நிலுவைக் கடன் இருப்பதாகவும், பொதுத் துறை நிறுவனங்களின் ஒட்டுமொத்த இழப்பு ரூ.78,851 கோடியாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மாநில சாலை போக்குவரத்து கழகம், குடிநீர் வாரியம் உள்ளிட்ட நிறுவனங்கள் முக்கிய காரணங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன. எஸ்.சி./எஸ்.டி. மற்றும் சிறுபான்மையினர் நலத் திட்ட ஒதுக்கீடுகள் சமீப ஆண்டுகளில் குறைந்தது, எதிர்பார்த்ததை விட குறைவான மாநில வரி வருவாய், மத்திய அரசின் நிதியுதவி குறைவு ஆகியவையும் நிதி நெருக்கடிக்கான காரணங்களாக கூறப்பட்டுள்ளது.
வெள்ளை அறிக்கை அரசியல் உள்நோக்கத்துடன் அல்ல; நிதியமைச்சகத்தின் மேற்பார்வையில் பொதுவெளியில் உள்ள தரவுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட உண்மை ஆவணம் என முதல்வர் சதீசன் தெரிவித்தார். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னாள் நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயன் உள்ளிட்டோர், இது முறைப்படி தயாரிக்கப்படவில்லை என்றும் அரசியல் ஆவணமாக உள்ளது என்றும் விமர்சித்தனர்; இதை முதல்வர் மறுத்து, மாநிலத்தின் எதிர்காலத்துக்கான “வரைபடம்” ஆக இது பயன்படும் என்றார்.





