தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளை ஒட்டிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

ஜூன் 5-ம் தேதி நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தென்காசி, நெல்லை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

ஜூன் 6-ம் தேதி கோவை மலைப்பகுதி, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மிக கனமழை எதிர்பார்க்கப்படுவதால் ஆரஞ்ச் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நாளில் தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பூர், மதுரை, விருதுநகர் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

ஜூன் 7-ம் தேதி கோவை மலைப்பகுதி, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களில் மிக கனமழை தொடரக்கூடும்; தென்காசி, நெல்லை, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, விருதுநகர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. ஜூன் 8-ல் பல பகுதிகளில் கனமழை, ஜூன் 9 மற்றும் 10-ல் கோவை, தென்காசி, நெல்லை மலைப்பகுதிகள் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை, ஜூன் 11-ல் நீலகிரி மற்றும் நெல்லை மலைப்பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.