தமிழகத்தில் தனியார் பள்ளிகள், கல்விக் கட்டண விவரங்களை பள்ளி அறிவிப்பு பலகைகளில் வெளியிட வேண்டும் என்ற உத்தரவுகளை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளன. மாநில தகவல் ஆணையத்தின் உத்தரவும், அதனைத் தொடர்ந்து தனியார் பள்ளிகள் இயக்குநரகம் வெளியிட்ட சுற்றறிக்கையும் ரத்து செய்யப்பட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கத்தின் பொதுச்செயலர் கே. பழனியப்பன் தாக்கல் செய்த மனுவில், மே 25 அன்று மாநில தகவல் ஆணையம், அரசு நிர்ணயித்த கட்டண விவரங்களை அனைத்து தனியார் பள்ளிகளும் கட்டாயமாக அறிவிப்பு/விளம்பர பலகையில் வெளியிட வேண்டும் என தனியார் பள்ளிகள் இயக்குநருக்கு உத்தரவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக, ஜூன் 1 அன்று தனியார் பள்ளிகள் துறை இயக்குநர், ஜூன் 5க்குள் கட்டண விவரங்களை அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும் என அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியதாக மனுவில் கூறப்பட்டுள்ளது. ஆனால் தகவல் அறியும் உரிமைச் சட்டம் தனியார் சுயநிதி கல்வி நிறுவனங்களுக்கு பொருந்துமா என்பது ஆராயப்படவில்லை என மனுதாரர் வாதிட்டுள்ளார்.

மேலும், தெளிவான சட்டப்பூர்வ விதிமுறை இல்லாமல் கட்டண கட்டமைப்பை வெளியிடுமாறு கட்டாயப்படுத்த இயக்குநருக்கு அதிகாரம் இல்லை என்றும், மத்திய அரசின் சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ. அங்கீகாரம் பெற்ற பள்ளிகள் மாநில பள்ளிக் கல்வித் துறையின் வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டவையா என்பதும் கேள்விக்குறி என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன் அறிவிப்போ அல்லது விசாரணையோ இன்றி நான்கு நாட்களில் உத்தரவை அமல்படுத்தச் சொல்வது இயற்கை நீதிக்கு முரணானது எனக் கூறி, மாநில தகவல் ஆணையத்தின் உத்தரவும் அதன்படி வெளியான சுற்றறிக்கையும் ரத்து செய்ய வேண்டும் என கோரப்பட்டுள்ளது.