கல்விக்கான மத்திய அரசின் நிதியை பெறுவதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெறும்; தேவையெனில் டில்லி சென்று அதிகாரிகளுடன் நேரில் பேச்சுவார்த்தை நடத்தவும் தயாராக உள்ளோம் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் புதன்கிழமை தெரிவித்தார்.
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள சி.எம்.டி.ஏ. குடியிருப்பு அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். அங்கு மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டதுடன், ‘ஸ்மார்ட்’ வகுப்பறை திறக்கப்பட்டு, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சி முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தனியார் பள்ளிகள் தாங்கள் வசூலிக்கும் கல்விக் கட்டண விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளதாக கூறினார். பள்ளிகள் தொடர்பான கோரிக்கைகளை நிறைவேற்ற இடைத்தரகர்கள் அல்லது அரசியல்வாதிகளுக்கு லஞ்சம் கொடுக்கும் பழக்கம் இனி அனுமதிக்கப்படாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஒற்றைச் சாளர முறையில் நடவடிக்கைகள் வெளிப்படையாக தொடரும் நிலையில், கட்டண விவரங்களை தெரிவிக்காத பள்ளிகள் குறித்து புகார்கள் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும், ஆசிரியர்கள் மற்றும் சங்கங்களை பழிவாங்கும் நோக்கில் தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டு, அவர்களின் கோரிக்கைகள் பரிசீலித்து தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். கல்வி நிதிக்கான முயற்சிகள் தொடரும் நிலையில், அதற்காக இருமொழிக் கொள்கையிலிருந்து பின்வாங்க மாட்டோம் என்றும் அவர் கூறினார்.





