புதுடில்லி: இந்திய ரூபாய் மதிப்பு சரிவும், தனியார் முதலீடுகளில் காணப்படும் மந்தநிலையும் குறித்து நிதி விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் கவலை தெரிவித்தனர்.
குழுத் தலைவர் பார்த்ருஹரி மஹ்தாப் தலைமையில் நடந்த கூட்டத்தில், பணவீக்கம் உள்ளிட்ட உள்நாட்டு காரணிகளுடன், மேற்காசிய போர் போன்ற வெளிப்புற அபாயங்களையும் சுட்டிக்காட்டி உறுப்பினர்கள் கேள்விகள் எழுப்பினர்.
மேலும் இந்தியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான நிலை, சீனா தனது தொழில்துறையை பாதுகாக்க கொண்டு வந்துள்ள புதிய கட்டுப்பாடுகள் ஆகியவற்றையும் குறித்து விளக்கம் கோரப்பட்டது.
இதற்கு பதிலளித்த பொருளாதார விவகாரங்கள் துறை செயலர் அனுராதா தாக்கூர் மற்றும் அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன், பல்வேறு சவால்கள் இருந்தாலும் இந்திய பொருளாதாரம் வலுவான பாதையில் முன்னேறி வருவதாக தெரிவித்தனர். இந்தியா மிகப்பெரிய சந்தை என்பதால் இந்த அழுத்தங்களை சமாளிக்க முடியும் என்றும் அவர்கள் கூறினர்.





