பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட தங்க சுத்திகரிப்பு மற்றும் ஆபரண உற்பத்தி நிறுவனமான ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் மீது, ரூ.15.15 லட்சம் கோடி அளவிலான நிதி முரண்பாடு தொடர்பான புகாரைத் தொடர்ந்து செபி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

செபி தரப்பில், 2024 மார்ச் 11 அன்று நிறுவனத்தின் பெரிய மதிப்புள்ள வர்த்தகங்கள் மற்றும் அறிவிக்கப்பட்ட தொகைகள் குறித்து புகார் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டதுடன், நிறுவனத்தின் கணக்குகளை ஆய்வு செய்து நிதிசார் அறிக்கைகளை சரிபார்க்க தனி அதிகாரியும் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆரம்ப ஆய்வில், 2021 முதல் 2025 நிதியாண்டுகள் வரை நிறுவனத்தின் அறிவிக்கப்பட்ட வருவாயில் பெரும்பகுதி வெளிநாட்டு துணை நிறுவனங்களிலிருந்து வந்ததாகவும், மொத்த வருமானத்தில் 97% முதல் 99% வரை அந்த துணை நிறுவனங்கள் மூலமே பதிவானதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், நிறுவனம் முன்பு கையகப்படுத்திய சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த தங்க சுத்திகரிப்பு ஆலையான வால்காம்பி மற்றும் பிற துணை நிறுவனங்களின் கணக்குகளை ஆய்வு செய்தபோது பெரிய முரண்பாடுகள் கண்டறியப்பட்டதாக செபி கூறியுள்ளது. வால்காம்பியின் வருமானம் குறைந்த அளவிலேயே பதிவாகியிருந்ததாகவும், ஐந்து ஆண்டுகளில் ரூ.15.15 லட்சம் கோடி அளவில் வேறுபாடு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் ராஜேஷ் மேத்தாவுக்கு பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மறுத்துள்ள ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ், இது இடைக்கால உத்தரவு என்றும், அறிவித்த வருமானம் சரியானது என்றும் கூறி, செபியுடன் ஏற்பட்ட தகவல் தொடர்பு இடைவெளி காரணமாக குழப்பம் ஏற்பட்டதாகவும், தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து விளக்கம் அளித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.