தமிழக சட்டசபை கூட்டம் ஜூன் 18 காலை 10 மணிக்கு தொடங்கும்; தொடக்க நாளில் கவர்னர் அர்லேகர் உரையாற்றுவார் என்று சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் சென்னையில் அறிவித்தார்.

தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தக் கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும், அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் அதற்கான முடிவு எடுக்கப்படும் என்றும் கூறினார்.

மேலும், அதிமுக உறுப்பினர்கள் அளித்த மனுக்கள் ஆய்வில் உள்ளதாகவும், கடிதங்கள் தொடர்பான முடிவுகள் உரிய நேரத்தில் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அவை நடவடிக்கைகள் குறித்து மக்கள் ஆர்வம் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், நம்பிக்கை வாக்கெடுப்பை நேரலையில் பார்த்தவர்கள் தொடர்ந்து சட்டசபை செயல்பாடுகளையும் நேரலையில் காண விரும்புகின்றனர் என்றார். அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்ற சட்டசபை நேரலை ஏற்பாடுகள் சரியான நேரத்தில் முறையாக மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.