சென்னையில் ஜூன் 9ம் தேதி வானில் அரிய காட்சி காண வாய்ப்பு உள்ளது. இரவு வானில் மிகப் பிரகாசமாகத் தெரியும் வெள்ளி மற்றும் வியாழன் ஆகிய இரண்டு கோள்களும் வழக்கத்திற்கு மாறாக மிக அருகில் தோன்றவுள்ளன.

சூரியனைச் சுற்றி கோள்கள் நீள்வட்டப் பாதையில் சுற்றும் போது, சில நேரங்களில் பூமியிலிருந்து பார்க்கும்போது அவை ஒன்றுக்கொன்று நெருக்கமாகத் தோன்றும். இந்த நிகழ்வில் வெள்ளி–வியாழன் இடைவெளி சுமார் 0.5 முதல் 1.6 டிகிரி வரை மட்டுமே இருக்கும் என்பதால், இரட்டைக் கோள்கள் போலவும், ஒன்றை ஒன்று தொடுவது போலவும் காட்சியளிக்கலாம்.

சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு 45 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை இந்தக் காட்சியைப் பார்க்க முடியும். மேற்கு–வடமேற்கு திசையில் வானத்தை நோக்கினால் இரு கோள்களும் தெளிவாகத் தெரியும்.

இரண்டும் மிகப் பிரகாசமாக ஜொலிப்பதால் தொலைநோக்கி தேவையில்லை; வெறும் கண்களாலேயே எளிதாகக் காணலாம். பூமியிலிருந்து வியாழன் தொலைவில் இருப்பதால் அது சற்றே மங்கலாகத் தோன்றலாம் என வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேபோன்ற நெருக்கக் காட்சி கடைசியாக 2025 ஆகஸ்ட் 25ல் நிகழ்ந்ததாகவும், ஜூன் 9க்கு பிறகு அடுத்த முறை 2027 ஆகஸ்ட் 25ல் மீண்டும் நிகழும் எனவும் அவர்கள் கூறினர்.