எல்லையோர மாநிலங்களில் சட்டவிரோத ஊடுருவல் மற்றும் அதனால் உருவாகும் “இயற்கைக்கு மாறான” மக்கள் தொகை மாற்றங்களை தடுக்க மத்திய அரசு உறுதியாக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வியாழக்கிழமை கூறினார்.

திரிபுராவில் இந்தியா–வங்கதேச எல்லையில் உள்ள லங்கமரா சோதனைச் சாவடியில் எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்) வீரர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், திரிபுரா எல்லை முக்கியமானது என்றும், திரிபுராவாகட்டும் பீஹாராகட்டும் இத்தகைய மாற்றங்களை அனுமதிக்க மாட்டோம் என்றும் தெரிவித்தார்.

இது அரசின் “அசைக்க முடியாத தீர்மானம்” எனக் கூறிய அமித்ஷா, எல்லைப் பகுதிகளில் சட்டவிரோத நுழைவையும் அதன் தாக்கத்தையும் தடுக்க நடவடிக்கைகள் தொடரும் என வலியுறுத்தினார்.

பின்னர் அவர் மரக்கன்று நட்டு வைத்ததுடன் பிஎஸ்எப் வீரர்களுடன் கலந்துரையாடினார். வீரர்கள் மரக்கன்றுகளை பாதுகாத்து பராமரிப்பதை பாராட்டிய அவர், அரசு திட்டங்களைக் கடந்தும் மரநடவு அனைவரின் பொறுப்பாக இருக்க வேண்டும் என்றும் அதிக அளவில் மரக்கன்றுகள் நட வேண்டும் என்றும் கூறினார்.