பிளஸ் 2 விடைத்தாள் சரிபார்ப்பு மற்றும் மறுமதிப்பீடு சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் சி.பி.எஸ்.இ. இணையதளத்தில் தொடர்ச்சியான சைபர் தாக்குதல்கள் நடந்ததாக மத்திய இடைநிலை கல்வி வாரியம் (CBSE) டில்லி போலீசில் புகார் அளித்துள்ளது.
இந்த ஆண்டு நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வை நாடு முழுவதும் 18.5 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுதியதாக சி.பி.எஸ்.இ. தெரிவித்துள்ளது. விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்கிரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் கணினித் திரை வழி மதிப்பீட்டு முறையில் திருத்தப்பட்டன.
முடிவுகள் வெளியான பின்னர் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்கவில்லை என மாணவர்கள் மற்றும் பெற்றோர் புகார் தெரிவித்தனர். இதையடுத்து திருத்தப்பட்ட விடைத்தாள்களை இணையதளத்தில் பதிவேற்றி, மறுமதிப்பீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இதில் சில பக்கங்கள் தெளிவாக இல்லை, சில பதில்கள் முழுமையாக பதிவேற்றம் செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டன.
புகாரில் கூறப்பட்டதாவது: சேவைகள் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே தாக்குதல்கள் நடந்துள்ளன; இணையதளத்தில் வழக்கத்துக்கு மாறான அதிக வருகை பதிவாகியுள்ளது. இரண்டு நிமிடங்களில் 15 லட்சம் வருகைகள், கோப்புகளை அணுக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்படாத முயற்சிகள், மேலும் இணையதள கட்டமைப்பை செயலிழக்கச் செய்யும் வகையில் 38 லட்சம் தீங்கிழைக்கும் தரவுத் தொகுப்புகள் மூலம் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக தடுக்கப்பட்டதாகவும், தேர்வு பதிவுகள் மற்றும் மாணவர் தகவல்கள் பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் சி.பி.எஸ்.இ. கூறியுள்ளது. இதன் அடிப்படையில் டில்லி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்துகின்றனர்.





