நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நடந்ததாக கூறப்படும் பணி நியமன முறைகேடு தொடர்பாக, லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) வழக்குப் பதிவு செய்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
2024–25 ஆண்டுகளில் உதவி, இளநிலை பொறியாளர் உள்ளிட்ட 2,538 பணியிட நியமனங்களில், ரூ.634 கோடி லஞ்சம் வசூலிக்கப்பட்டதாக புகார் கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்யுமாறு கடந்த ஆண்டு அக்டோபர் 27-ம் தேதி அமலாக்கத் துறை மாநில டிஜிபிக்கு கடிதம் அனுப்பியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மதுரையைச் சேர்ந்த ஆதிநாராயணன் மற்றும் அ.தி.மு.க. எம்.பி. இன்பதுரை ஆகியோர் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்தனர். அவற்றை விசாரித்த நீதிமன்றம், பிப்ரவரி 20-ம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறை உடனடியாக வழக்குப் பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.
பின்னர், நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தவில்லை எனக் கூறி நீதிமன்ற அவமதிப்பு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. அதே நேரத்தில், முன்னாள் தி.மு.க. அமைச்சர் நேரு மற்றும் தமிழக அரசு தரப்பில் மறு ஆய்வு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி, நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வில் நடந்த விசாரணையில், அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல், எப்.ஐ.ஆர். நகல் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும், அரசு மறு ஆய்வு மனுவை திரும்ப பெற முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து, ஜூன் 23-ம் தேதி வரை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது. லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த வழக்கின் மேல் நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதால் அரசுக்கு பாதிப்பு இல்லை என்றும், வழக்குகளை அன்றைய தினம் பட்டியலிட வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது.




