என்.சி.இ.ஆர்.டி. 9ம் வகுப்பு வரலாறு பாடப்புத்தகத்தில் ‘ஸ்வஸ்திகா’ சின்னம் தொடர்பாக தவறான சித்தரிப்பு இடம்பெற்றுள்ளதாக கூறி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவில், மத்திய அரசு மற்றும் என்.சி.இ.ஆர்.டி.க்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கூத்தனூர் பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் பாலாஜி தாக்கல் செய்த மனுவில், ஹிட்லர் நாஜி கட்சியின் சின்னமாக பயன்படுத்தியது ‘ஹாக்கன்குரூஸ்’ (கொக்கி சிலுவை) என்றும், அது ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகளில் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு மாறாக, ஹிந்துக்கள், பவுத்தர்கள், சமணர்களின் புனித மதச் சின்னமான ‘ஸ்வஸ்திகா’ நேர்மறை எண்ணம், அமைதி, மங்களத்தை குறிக்கிறது என மனுதாரர் தெரிவித்தார்.
மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் வரும் என்.சி.இ.ஆர்.டி. வெளியிட்ட 9ம் வகுப்பு வரலாறு பாடப்புத்தகத்தில், ‘ஹாக்கன்குரூஸ்’ இடம்பெற வேண்டிய இடத்தில் ‘ஸ்வஸ்திகா’ சின்னம் இடம் பெற்றுள்ளதாகவும், இது மாணவர்களின் மனதில் பாரபட்சமான மற்றும் தவறான கண்ணோட்டத்தை உருவாக்கக்கூடும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது. இது சமத்துவம் மற்றும் மத சுதந்திரம் தொடர்பான அரசியலமைப்பு உரிமைகளுக்கு எதிரானதாகவும் வாதிடப்பட்டது.
இதனால், பாடப்புத்தகத்தில் ‘ஸ்வஸ்திகா’ மற்றும் நாஜி காலத்து ‘ஹாக்கன்குரூஸ்’ சின்னம் ஆகியவற்றின் வேறுபாட்டை தெளிவாக விளக்கும் வகையில் திருத்தம் செய்யவும், நாஜி சின்னத்திற்கான சரியான ஜெர்மன் பெயராக ‘ஹாக்கன்குரூஸ்’ என்ற சொல்லை பயன்படுத்தவும் மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுதாரர் கோரினார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் என்.சதீஷ்குமார், எம்.ஜோதிராமன் அமர்வு, மத்திய பள்ளிக் கல்வித்துறை செயலர் மற்றும் என்.சி.இ.ஆர்.டி. இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கை ஜூலை 13க்கு ஒத்திவைத்தது.





