லண்டன்: பிரிட்டனில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் பங்கேற்றிருந்த நிலையில் ஏற்பட்ட அவமரியாதையான சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தலைமை நீதிபதி சூர்யகாந்த் பிரிட்டனில் ஆறு நாள் பயணத்தில் உள்ளார். இந்தப் பயணத்தின் போது தொழில்நுட்பம், சட்டம் மற்றும் உலகளாவிய நிர்வாகம் தொடர்பான தலைப்புகளில் சட்டம் மற்றும் கல்வி நிறுவனங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்று வருகிறார்.

அந்த வரிசையில், லண்டன் பல்கலைக்கழகத்தின் பிர்க்பெக் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார். நவீன உலகில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பயன்பாடு குறித்து பேசிக் கொண்டிருந்த போது, நிகழ்ச்சியில் இருந்த ஒருவர் ஏஐ காலத்தில் இந்தியாவின் ஜனநாயக விழுமியங்களை பாதுகாப்பது குறித்து கவலைகளை முன்வைக்க முயன்றதாக தெரிவிக்கப்பட்டது.

இதனை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தடுத்து, இது முழுமையாக ஏஐ தொழில்நுட்பம் தொடர்பான நிகழ்வு என்பதால் பிற கேள்விகளுக்கு அனுமதி இல்லை என்று கூறினர். இந்த சம்பவத்தின் காணொளி சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டது.

இதுகுறித்து லண்டனில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், பார்வையாளர்களின் இத்தகைய “நாகரிகமற்ற” நடத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது என்று தெரிவித்தது. கருத்து வேறுபாடுகள் ஜனநாயக சமூகத்தின் இயல்பான பகுதியாக இருந்தாலும், அவை நாகரிகமாகவும் மரியாதையுடனும் வெளிப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியது.