மனு மற்றும் முன்வைக்கப்பட்ட காரணங்கள்
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் சீமைக்கருவேல மரங்களை அகற்ற தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரினார். அந்த மரங்கள் நிலத்தடி நீர், காற்றிலுள்ள ஆக்சிஜன் மற்றும் ஈரப்பதத்தை உறிஞ்சி வெப்பத்தை அதிகரித்து, விவசாயம் மற்றும் சுற்றுச்சூழலை பாதிப்பதாக மனுவில் குறிப்பிடப்பட்டது.
முன் உத்தரவு
மார்ச் 18 அன்று இரு நீதிபதிகள் அமர்வு, சீமைக்கருவேல மரங்களை வேருடன் அகற்ற வேண்டும் என உத்தரவிட்டது. மேலும் அகற்றப்பட்ட பகுதிகளில் உள்ளூர் தாவரங்களை நட்டு பராமரிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
காலக்கெடு
அடுத்த பருவமழைக்கு முன் பணிகளை நிறைவு செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரதசக்கரவர்த்தி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அதிகாரிகளுக்கு எச்சரிக்கை
இந்த விவகாரத்தில் ஜூலை 10க்குள் முன்னேற்ற அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதில் முன்னேற்றம் இல்லாவிடில் இதை தீவிரமான விவகாரமாக கருதி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட நேரிடும் என எச்சரித்தனர்.





