புதுடில்லி: மேற்காசியப் போர் சூழ்நிலையால் உருவான நெருக்கடி தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

இஸ்ரேல்–ஈரான் இடையே தற்காலிக போர் நிறுத்தம் அமலில் இருந்தாலும், இருதரப்பும் மீண்டும் தாக்குதல்களை மேற்கொள்வதாக செய்தி கூறுகிறது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் கிடைப்பில் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் அதிகரித்து, பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்ந்ததுடன் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் மேலேறியுள்ளது.

இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், அதன் ஒரு பகுதியாகவே இந்த ஆலோசனை நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் மேற்காசியப் போர் இந்திய பொருளாதாரம் மற்றும் உலக பொருளாதாரத்தில் ஏற்படுத்தக்கூடிய சாத்தியமான தாக்கங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

மேலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்துவது, சர்வதேச சந்தைகளில் நிலவும் மாற்றங்களை எதிர்கொள்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது.

இதுகுறித்து சமூக வலைதளப் பதிவில், பொருளாதார ஆலோசனைக் குழுக் கூட்டத்துக்கு தலைமை தாங்கியதாகவும், இந்தியாவின் பொருளாதார மாற்றம் மற்றும் வளர்ச்சிக்கான முன்னுரிமைகள், சீர்திருத்தப் பயணத்திற்கு கூடுதல் உத்வேகம் அளிப்பது, வாழ்க்கை எளிமைப்படுத்துதல், தொழில் வளர்ச்சியை உறுதி செய்வது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆலோசித்ததாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.