மஹாராஷ்டிராவின் நாசிக்கில், பிரபல ஐ.டி. நிறுவனத்தின் பி.பி.ஓ. பிரிவில் கட்டாய மதமாற்றம் நடந்ததாக கூறப்படும் வழக்கில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இளம்பெண் ஊழியர்களை மதம் மாற வற்புறுத்தியதாகவும், மறுத்தவர்களுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

18 முதல் 23 வயதுக்குட்பட்ட பெண்கள் கடந்த பிப்ரவரியில் போலீசில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் ஒன்பது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பணியிடத்தில் ரகசிய விசாரணையும் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணையில், அங்கு பணியாற்றிய சில இஸ்லாமிய ஆண் ஊழியர்கள் பெண் ஊழியர்களை தொடர்ந்து மதம் மாற அழுத்தம் கொடுத்ததும், மறுத்தவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததும் உறுதியானதாக போலீசார் கூறுகின்றனர். டேனிஷ் ஷேக், தவுசிப் அத்தார், நிடா கான் உள்ளிட்ட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் நாசிக் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை, பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினர், நிறுவன ஊழியர்கள் உள்ளிட்ட 106 பேரின் வாக்குமூலங்களை அடிப்படையாக கொண்டதாக கூறப்படுகிறது. அதில் 23 வயது பெண் ஒருவர், பாகிஸ்தானைச் சேர்ந்த மதபோதகர் தாரிக் ஜமீலின் உரைகள் மற்றும் சமூக வலைதளங்களில் ஜாஹிர் நாயக், இஸ்ரார் அஹமது ஆகியோரின் வீடியோக்களை கட்டாயமாக பார்க்கவும் கேட்கவும் வற்புறுத்தப்பட்டதாகவும், தொடர்ந்த அழுத்தத்தால் தான் மதம் மாறியதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், ஏற்கனவே திருமணமான டேனிஷ் ஷேக் திருமணம் செய்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், பின்னர் ஹிந்து கடவுள்களை நம்புவதையும் கோவில்களுக்கு செல்வதையும் நிறுத்துமாறு கூறி மனஅழுத்தம் குறையும் என வற்புறுத்தியதாகவும் அவர் வாக்குமூலத்தில் கூறியதாக குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது.