தடை செய்யப்பட்ட ‘பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா’ (பி.எப்.ஐ.) அமைப்பின் தலைவர் ஓ.எம்.ஏ. சலாம் உட்பட 26 நிர்வாகிகள் மீது, யு.ஏ.பி.ஏ. (சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டம்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்ய டில்லி சிறப்பு என்.ஐ.ஏ. நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி, சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபாடு போன்ற புகார்களின் அடிப்படையில், 2022-ல் நாடு முழுவதும் பி.எப்.ஐ. தொடர்புடைய இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) சோதனைகள் நடத்தியது. அதன் தொடர்ச்சியாக தலைவர் சலாம் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

ஐ.எஸ். உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு உறுதியானதாக கூறப்பட்டதை அடுத்து, மத்திய அரசு 2022-ல் யு.ஏ.பி.ஏ. கீழ் பி.எப்.ஐ.-க்கு ஐந்து ஆண்டுகள் தடை விதித்தது. இதுதொடர்பான வழக்கு டில்லியில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

கூடுதல் அமர்வு நீதிபதி பிரசாந்த் ஷர்மா முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஆயுதப் போராட்டங்கள் மூலம் நாட்டின் மதச்சார்பற்ற அரசை கவிழ்த்து, 2047-ம் ஆண்டு அல்லது அதற்கு முன்பே இஸ்லாமிய ஆட்சியை நிறுவும் நோக்கில் நடவடிக்கைகள் மேற்கொண்டதாக ஆவணங்களில் இருந்து தெரியவருவதாக நீதிமன்றம் குறிப்பிட்டது. சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்ததில், இந்தியாவுக்கு எதிரான பெரிய சதித் திட்டத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுவதாகவும் கூறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பயங்கரவாத செயல்களுக்கு ஆட்சேர்த்தல், ஆயுதங்களை சேகரித்தல், அரசுக்கு எதிராக போர் தொடுக்க முயற்சித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 26 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய என்.ஐ.ஏ.-க்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கு அடுத்த மாதம் 10-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.