சென்னை வானிலை மையம் (ஆர்எம்சி) இன்று (ஜூன் 6) நீலகிரி மாவட்டம் மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் மிக கனமழைக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுத்துள்ளது.
வானிலை அறிக்கையில், நீலகிரி மற்றும் கோவை மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தென்காசி, திருநெல்வேலி மலைப்பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளிலும், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர், விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி-மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
நாளை (ஜூன் 7) தென்காசி, திருநெல்வேலி, கோவை மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, மதுரை, விருதுநகர் ஆகிய 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி-மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஜூன் 8-ஆம் தேதியும் தென்காசி, திருநெல்வேலி, கோவை மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இதேபோன்ற கனமழை வாய்ப்பு தொடரலாம் என கூறப்பட்டுள்ளது.
மேலும் இன்று அதிக வெப்பநிலையும் அதிக ஈரப்பதமும் நிலவுவதால், கடலோர தமிழ்நாட்டின் சில இடங்களில் அசவுகரியம் ஏற்படக்கூடும் என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.





