நார்வே தலைநகர் ஓஸ்லோவில் நடைபெறும் சர்வதேச ‘கிளாசிக்கல்’ நார்வே செஸ் தொடரின் 14வது சீசனில் ஆண்கள் பிரிவில் 6 பேர் பங்கேற்றுள்ளனர். இதில் இந்தியாவின் நடப்பு உலக சாம்பியன் டி. குகேஷ், தமிழகத்தின் ஆர். பிரக்ஞானந்தா, நடப்பு சாம்பியன் மாக்னஸ் கார்ல்சன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
9வது சுற்றில் பிரக்ஞானந்தா–குகேஷ் மோதல் நடைபெற்றது. இதே தொடரின் 5வது சுற்றில் குகேஷ், பிரக்ஞானந்தாவை வென்றிருந்தார்.
இம்முறை கருப்பு காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 34 நகர்த்தலில் குகேஷை வீழ்த்தினார். இதன் மூலம் தொடரில் தொடர்ந்து மூன்றாவது வெற்றியைப் பெற்று ‘ஹாட்ரிக்’ சாதனையையும் பதிவு செய்தார்.
மற்றொரு போட்டியில் உலகின் நம்பர்-1 வீரர் மாக்னஸ் கார்ல்சன், அமெரிக்காவின் வெஸ்லே சோவிடம் தோல்வியடைந்தார். 9 சுற்றுகள் முடிவில் வெஸ்லே சோ 15.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்; பிரக்ஞானந்தா 15.0 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், பிரான்சின் அலிரேசா 14.5 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். குகேஷ் 8 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளார்.





