ரஷ்யாவுடன் உள்ள உறவை குறைக்க இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்தால் அது உலகளாவிய ஸ்திரத்தன்மையை பாதிக்கும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார்.

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியா உலகின் முக்கிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக வளர்ந்துள்ளதாகவும், அந்த முன்னேற்றத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் நடவடிக்கைகள் காரணம் என்றும் கூறினார்.

இந்தியாவுடன் உள்ள இருதரப்பு வர்த்தகத்தை ஆண்டுக்கு தற்போதுள்ள சுமார் ரூ.5.70 லட்சம் கோடியிலிருந்து ரூ.9.50 லட்சம் கோடியாக உயர்த்த இலக்கு வைத்துள்ளதாகவும், இருநாடுகளின் மொத்த ஒத்துழைப்பையும் மேலும் விரிவுபடுத்த திட்டமுள்ளதாகவும் புடின் தெரிவித்தார்.

மேற்கத்திய நாடுகளில் சில, ரஷ்யாவுடன் உறவை குறைக்க இந்தியாவை வற்புறுத்தி வருவதாக அவர் குற்றம்சாட்டினார். இது நட்பை சோதிக்கும் முயற்சி என்றும், இந்தியா போன்ற மிகப்பெரிய ஜனநாயக நாட்டுடன் ரஷ்யாவின் உறவு மேலும் வலுப்படும் என்றும், அதற்கான திட்டங்கள் தயாராக உள்ளன என்றும் அவர் கூறினார்.