கோவை: ஊடகங்கள் கேள்விகள் கேட்பதைவிட தவறுகள் நடந்தால் அதை சுட்டிக்காட்டினால், அரசு உரிய நடவடிக்கை எடுக்க வசதியாக இருக்கும் என்று அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தென்மேற்கு பருவமழையால் தமிழகத்தில் இதுவரை பெரிய பாதிப்பு இல்லை என்றும், அச்சுறுத்தலும் இல்லை என்றும் கூறினார். கன்னியாகுமரி, கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் அடுத்த ஐந்தாண்டுகளில் ஒவ்வொரு துறையும் எப்படி செயல்பட வேண்டும், மக்கள் எதிர்பார்ப்பு என்ன, செய்ய வேண்டிய பணிகள் என்ன என்பதைக் குறித்து விவாதிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
சட்டம்-ஒழுங்கு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். காவிரி நீர் தொடர்பாக மேகதாது அணை கட்டப்படுவதைத் தடுக்க வேண்டும் என்று முதல்வர் பிரதமரை வலியுறுத்தியுள்ளதாகவும் கூறினார். மேலும், தங்கள் கூட்டணியில் திறந்த மனப்பான்மையுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.





