சென்னை: தி.மு.க. இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலினின் தனிப்பட்ட அரசியல் வியூக ஆலோசகராக இருந்த சுனில் கன்கோலு, அந்தப் பொறுப்பிலிருந்து விலகியுள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
கட்சியின் தேர்தல் வியூகப் பணிகளில், முதல்வர் மு.க. ஸ்டாலினின் மருமகன் சபரீசனுடன் தொடர்புடைய ‘பென்’ நிறுவனம் முக்கியப் பங்கு வகித்ததாகவும், ஆனால் உதயநிதி அந்த நிறுவனத்தை முழுமையாக நம்பாமல் கர்நாடகாவைச் சேர்ந்த சுனிலை 2022 முதல் தனிப்பட்ட ஆலோசகராக வைத்திருந்ததாகவும் அவர்கள் கூறினர்.
சுனில் முன்பு தெலுங்கானா, கர்நாடகா தேர்தல்களில் காங்கிரசுக்காகவும், 2021 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுக்காகவும் பணியாற்றியவர் எனவும் நிர்வாகிகள் குறிப்பிட்டனர். நடிகர் விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ (த.வெ.க.) தொடங்கிய பிறகு, அந்தக் கட்சிக்கு மக்களிடம் உள்ள செல்வாக்கை முன்வைத்து அரசியல் ரீதியாக எதிர்கொள்ள வேண்டும் என்று சுனில் ஆலோசனை வழங்கியதாகவும் கூறப்பட்டது.
ஆனால், ‘விஜய்க்கு பெரிய மக்கள் செல்வாக்கு இல்லை; அவரைப் பற்றி பேசாமல் இருந்தாலே தி.மு.க. வெற்றி பெறும்’ என்ற நிலைப்பாடு ‘பென்’ தரப்பில் இருந்ததாகவும், கட்சிக்குள்ளும் ஸ்டாலினிடமும் அந்த நிறுவனத்தின் தாக்கம் அதிகமாக இருந்ததால் சுனிலின் ஆலோசனைகள் முன்னேறவில்லை என்றும் நிர்வாகிகள் தெரிவித்தனர். மேலும், தொடர் சுற்றுப்பயணம், தடாலடி அரசியல் போன்ற சுனிலின் பரிந்துரைகளையும் உதயநிதி முழுமையாக ஏற்கவில்லை என கூறப்பட்டது.
இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்ததாகவும், அதன் தொடர்ச்சியாக சுனில் உதயநிதியிடமிருந்து விலகியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். தற்போது அவர் மீண்டும் தெலுங்கானா சென்று காங்கிரசுக்கான வியூகப் பணிகளில் ஈடுபடுவதுடன், விஜயின் த.வெ.க.க்கு பின்னணியில் இருந்து பணியாற்றவும் முடிவு செய்துள்ளதாக நிர்வாகிகள் கூறினர்.





