திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில், 2 ஆண்டுகளுக்கு முன் பின்பற்றப்பட்ட நடைமுறையே தொடரும்; இதில் எந்த மாற்றமும் செய்யப்படாது என்று அமைச்சர் நிர்மல்குமார் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் அமைதியையே விரும்புகிறார்கள் என்றும், பழைய நடைமுறையைத் தொடர்வதே மக்களின் விருப்பத்திற்கும் அரசின் கொள்கைக்கும் ஏற்பதாகும் என்றும் கூறினார். இந்த விஷயத்தில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், இந்த விவகாரத்தில் எந்த “மதவாத சக்திகளும்” உள்ளே வந்து அரசியல் செய்ய அரசு 100 சதவீதம் அனுமதிக்காது என்றும் அமைச்சர் கூறினார்.
முதல்வர் ஏன் அடிக்கடி செய்தியாளர்களை சந்திப்பதில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், தினமும் செய்தியாளர்களை சந்தித்தே ஆக வேண்டும் என்ற நிர்ணயத்தை நிர்ணயிக்க வேண்டாம் என்றார். தேவையான நேரத்தில் முதல்வர் செய்தியாளர்களை சந்திப்பார் என்றும், அரசு மற்றும் கட்சி சார்பில் தாங்கள் தொடர்ந்து ஊடகங்களை சந்தித்து வருகிறோம் என்றும் விளக்கினார்.





