சென்னை: முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில், ‘அறம், பொருள், இன்பம்’ என்ற கட்டமைப்பில் அனைத்து துறைகளிலும் செயல்படுத்த 436 தொலைநோக்கு செயல் திட்டங்கள் வகுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
34 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ள புதிய கூட்டணி அரசின் முதல் அமைச்சரவை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. காலை 10:05 மணிக்கு தொடங்கி 11:20 மணிவரை நடந்த இந்தக் கூட்டத்தில் சட்டம்-ஒழுங்கு, போதைப் பொருள் கட்டுப்பாடு, பருவமழை முன்னெச்சரிக்கை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விரிவாக விவாதிக்கப்பட்டன.
தேர்தல் அறிக்கையில் “வெற்றி தமிழகம்” என்ற பெயரில் வெளியிடப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்காக ‘அறம், பொருள், இன்பம்’ என்ற பெயரில் 10 அம்ச செயல் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
‘அறம்’ கீழ் தமிழ் அடையாளம் மற்றும் அதன் பெருமையை மேம்படுத்த 52 திட்டங்களும், மக்களின் கண்ணியமான வாழ்வு மற்றும் சமூக பாதுகாப்பை உறுதி செய்ய 93 திட்டங்களும் பட்டியலிடப்பட்டுள்ளன. ‘பொருள்’ கீழ் மகளிர் நலன், இளைஞர் நலன், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், மீனவர்கள் நலன், உலகத் தரக் கல்வி, வளமான தமிழகம் ஆகிய இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
‘இன்பம்’ கீழ் மருத்துவம் மற்றும் சுற்றுச்சூழல், உலகத் தரமான கட்டமைப்பு, மக்கள் அரசு, நேர்மையான நிர்வாகம் ஆகியவை இலக்குகளாக குறிப்பிடப்பட்டுள்ளன. மொத்தம் 54 பிரிவுகளின் கீழ் 436 திட்டங்கள் தொகுக்கப்பட்டுள்ள நிலையில், துறை வாரியாக செயல்படுத்துவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு, அமைச்சர்களுக்கு வழிமுறைகளை முதல்வர் எடுத்துரைத்தார்.
கூட்டத்திற்குப் பிறகு மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் கூறுகையில், ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியாக செயல் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன என்றும், மின் துறைக்கு 10 திட்டங்கள் உள்ளன என்றும் தெரிவித்தார். அதிகாரிகளுடன் அமைச்சர்கள் ஆலோசித்து செயலாக்க வழிமுறைகளை உருவாக்கி, எவ்வளவு விரைவில் நடைமுறைப்படுத்த முடியும் என்பதை உறுதி செய்து, பின்னர் முதல்வரின் ஒப்புதல் பெற்று திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.





