சென்னை: காவல் நிலைய எல்லை (ஜூரிஸ்டிக்ஷன்) காரணம் காட்டி பொதுமக்களிடம் இருந்து புகார் பெறாமல் அவர்களை அலைக்கழிக்கக் கூடாது என தமிழ்நாடு டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

குற்றம் நடந்த இடம் எந்த காவல் நிலைய எல்லைக்குள் வருகிறது என்பதில் தெளிவின்மை இருப்பதால், காவல் நிலையங்களில் புகார் பெறுவதில் தாமதம் ஏற்பட்டு, புகார்தாரர்கள் பல இடங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உருவாகிறது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுதொடர்பாக காவல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், ஒருவர் எந்த காவல் நிலைய எல்லையில் வசித்தாலும், வழிப்பறி, விபத்து உள்ளிட்ட எந்த குற்ற சம்பவமாக இருந்தாலும் காரணம் கூறி புகார் பெறாமல் திருப்பி அனுப்பக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் புகாரை பெற்றுக்கொண்டு, பின்னர் உரிய காவல் நிலையத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளின் தொடர்பு எண்களையும் புகார்தாரர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

பொதுமக்களிடம் இருந்து புகார் பெற மறுக்கும் போலீசார் மீது உடனடியாக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுற்றறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.