சென்னை: தி.மு.க. முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி தொடர்பான ஊழல் வழக்கில், டெண்டர் ஆவணங்கள் மற்றும் கணினி ஹார்ட் டிஸ்க்கள் சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சியில் 2021–2023 காலகட்டத்தில் 45,800 மின்மாற்றிகள் கொள்முதல் செய்யப்பட்டதில் ₹397 கோடி அளவுக்கு முறைகேடு நடந்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக செந்தில் பாலாஜி மற்றும் அரசு அதிகாரிகளை பெயரிட்டு சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
இதற்கிடையில், சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரியத் தலைமையகத்தில் இருந்து மின்மாற்றி டெண்டர் தொடர்பான ஆவணங்கள் திருடப்பட்டதாகவும், அதனுடன் தொடர்புடைய தகவல்கள் உள்ள ஹார்ட் டிஸ்க்களும் எடுத்துச் செல்லப்பட்டதாகவும் புகார் அளிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் சிந்தாதிரிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து, ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆப்பரேட்டராக பணியாற்றிய ராணிப்பேட்டையைச் சேர்ந்த கோபிநாத் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 34 ஹார்ட் டிஸ்க்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் கூறினர்.
பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் மற்றும் ஹார்ட் டிஸ்க்கள் தற்போது சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலும் லஞ்ச ஒழிப்பு பிரிவில் இருந்த சில ஆவணங்களும் சிபிஐக்கு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மின்மாற்றி கொள்முதல் குற்றச்சாட்டுகள் தொடர்பான சிபிஐ விசாரணை தீவிரமடைந்து வருவதாக அதிகாரிகள் கூறினர்.





