புதுடில்லி: சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வில் ஆள்மாறாட்டத்தைத் தடுக்கும் நோக்கில் முக அங்கீகார தொழில்நுட்பத்தை யு.பி.எஸ்.சி. (மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம்) வெற்றிகரமாக செயல்படுத்தியதாக தெரிவித்துள்ளது.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். உள்ளிட்ட மத்திய அரசின் முக்கிய பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இது முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்காணல் என மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது.

இந்த ஆண்டுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த மே 24 அன்று நாடு முழுவதும் 2,072 தேர்வு மையங்களில் நடைபெற்றது. மொத்தம் 8.19 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில், 5.49 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்றதாக யு.பி.எஸ்.சி. தெரிவித்தது.

முந்தைய ஆண்டுகளில் ஆள்மாறாட்ட சம்பவங்கள் நடந்ததாக கூறப்படும் நிலையில், இதுபோன்ற முறைகேடுகளை முற்றிலும் ஒழிக்க இந்த முகச் சரிபார்ப்பு நடைமுறை கொண்டு வரப்பட்டது.

இதற்கான மொபைல் செயலி, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய மின் ஆளுகை பிரிவின் தொழில்நுட்ப ஆதரவுடன் உருவாக்கப்பட்டது. தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் ஆண்ட்ராய்டு போன்களில் செயலியை பயன்படுத்தி, விண்ணப்பத்தின் போது பதிவேற்றிய புகைப்படத்துடன் தேர்வெழுத வந்தவரின் முகம் பொருந்துகிறதா என்பதை சரிபார்த்தனர்; ஒருவருக்கான சரிபார்ப்பு சில விநாடிகளில் முடிந்ததாக யு.பி.எஸ்.சி. தெரிவித்தது.