கோவை: உள்ளாட்சி அமைப்புகளில் மக்களுக்கு வெளிப்படையான, தரமான மற்றும் காலதாமதமின்றி சேவை வழங்க மாநகராட்சி மற்றும் நகராட்சி ஆணையர்களுக்கு நகராட்சி நிர்வாகத்துறை புதிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.

துறையின் கூடுதல் செயலர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்ட அறிவுறுத்தல்களில், துறை அமைச்சர் விஜய் நேரடி கண்காணிப்பில் செயல்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தினசரி பணிகளில் சுகாதாரம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை தொடர்பாக காலை 7 மணிக்கு முன்பே களத்தில் சென்று ஆய்வு செய்ய ஆணையர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொது கழிப்பறைகள், பஸ் நிலையங்கள் போன்ற இடங்களில் மூத்த அதிகாரிகள் ஆய்வு செய்து துாய்மையை உறுதி செய்ய வேண்டும். பணியாளர்களின் வருகைப்பதிவை தினமும் கண்காணித்து, தேவையற்ற விடுப்புகளை தவிர்க்கவும் கூறப்பட்டுள்ளது. சாலைகளில் படிந்த மண்/சேறு தினசரி அகற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் சைட், நீர்நிலைகள் மற்றும் சாலையோரங்களில் மரம் வளர்த்து பசுமை பரப்பை உருவாக்க வேண்டும். பூங்காக்களில் குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள் நல்ல நிலையில் உள்ளனவா என ஆய்வு செய்ய வேண்டும். பழுதான தெருவிளக்குகளை 24 மணி நேரத்திற்குள் சரி செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

குடிநீர் விநியோகம் உள்ளிட்ட அத்தியாவசிய பிரச்னைகள் தொடர்பான புகார்களுக்கு முன்னுரிமை அளித்து தீர்வு காண வேண்டும். கட்டட அனுமதிகளில் வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்பட வேண்டும்; விதிமீறல் ஏற்பட்டால் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.