சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தொடர்பான மோசடி வழக்கை தொடர்ந்து நடத்த அமலாக்கத் துறைக்கு (ED) தமிழக கவர்னர் ராஜேந்திர அர்லேக்கர் அனுமதி வழங்கியுள்ளதாக, அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

2011 முதல் 2016 வரை அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த காலத்தில், ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட பணிகளை வாங்கித் தருவதாக கூறி பலரிடமிருந்து பணம் பெற்றதாக செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இதன் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 2015, 2017 மற்றும் 2018 ஆண்டுகளில் நான்கு மோசடி வழக்குகளை பதிவு செய்தனர். எம்.பி., எம்.எல்.ஏ. வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இவை விசாரணையில் உள்ளன.

இந்த குற்றச்சாட்டுகளின் தொடர்ச்சியாக சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கூறி, 2023 ஜூன் 14-ல் அமலாக்கத் துறை செந்தில் பாலாஜியை கைது செய்தது. சுமார் 15 மாதங்கள் சிறையில் இருந்த அவர், உச்ச நீதிமன்றத்தால் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

முன்னதாக இத்தகைய வழக்குகளை தொடர அரசின் அனுமதி அவசியமில்லை என்ற நிலை இருந்தாலும், சமீபத்திய உச்ச நீதிமன்ற உத்தரவின்படி குற்றச்சாட்டில் சிக்கியவர் ‘பொது ஊழியர்’ என்றால் மாநில அரசின் அனுமதி பெற வேண்டும். அதன்படி அமலாக்கத் துறை தமிழக அரசிடம் அனுமதி கோர, அரசு அந்த கோரிக்கையை கவர்னரிடம் அனுப்பி ஒப்புதல் பெற்றதாக வட்டாரங்கள் தெரிவித்தன.