ஹரியானா அரசின் ‘குளோபல் சிட்டி’ திட்டத்தின் ஒரு பகுதியாக, குருகிராமில் நாட்டின் மிக உயரமான கட்டடத்தை அமைக்க திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார வளர்ச்சி மற்றும் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை இலக்காகக் கொண்டு, குருகிராமில் சுமார் 1,000 ஏக்கர் பரப்பில் ‘குளோபல் சிட்டி’ உருவாக்கப்பட்டு வருகிறது. விரைவுச்சாலையின் அருகே அமையவுள்ள இந்த வளாகம், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் உலகளாவிய முதலீட்டாளர்களை ஈர்க்கும் பெரிய வணிக மையமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் மாஸ்டர் பிளான் மற்றும் உள்கட்டமைப்பு சாத்தியக்கூறுகள் குறித்து டில்லி, பெங்களூரு, மும்பை ஆகிய நகரங்களைச் சேர்ந்த முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்களுடன் கடந்த மூன்று ஆண்டுகளாக அரசு ஆலோசனையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திட்டத்தின் மையப்பகுதியில் 6.7 ஏக்கர் பரப்பில் முக்கியமான கோபுரம் அமைக்க இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த கோபுரம் 2,000 முதல் 2,300 அடி உயரத்தில் வணிகம் மற்றும் குடியிருப்பு கலப்பு பயன்பாட்டுடன் உருவாக்கப்பட உள்ளது. இடத்தை ஹரியானா மாநில தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் அடையாளம் கண்டுள்ளதாகவும், திட்டம் முழுமையாக நடைமுறைக்கு வந்தால் நாட்டின் மிக உயரமான கட்டடமாக மட்டுமல்ல, உலகின் டாப் 10 உயரக் கட்டடங்களின் பட்டியலிலும் இடம் பெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.
தற்போது நாட்டின் மிக உயரமான கட்டடமாக மும்பையில் உள்ள ‘பாலே ராயல்’ குறிப்பிடப்படுகிறது; அதன் உயரம் 984 அடி என தகவல் தெரிவிக்கிறது.





