சண்டிகரில் நடைபெறும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரே டெஸ்ட் போட்டியில், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து முதல் இன்னிங்சை 8 விக்கெட் இழப்பிற்கு 564 ரன்களில் டிக்ளேர் செய்தது.

டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஷுப்மன் கில் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதல் நாளில் இந்திய பேட்டர்கள் ஆதிக்கம் செலுத்தினர். கே.எல். ராகுல் சதம் அடித்தார்; கிலும் சதம் கடந்தார். சாய் சுதர்சன் 81 ரன்கள் எடுத்தார்; ரிஷப் பன்ட் அரைசதம் கடந்தார். முதல் நாள் முடிவில் இந்தியா 368/3 என வலுவான நிலையில் இருந்தது.

இரண்டாம் நாள் ஆட்டத்தை கில் 103 ரன்னுடனும், பன்ட் 50 ரன்னுடனும் தொடங்கினர். கில் 126 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து துருவ் ஜூரேல் (19), பன்ட் (81), மனவ் சுதார் (28), முகமது சிராஜ் (22) ஆகியோர் வெளியேறினர்.

வாஷிங்டன் சுந்தர் அரைசதம் (52*) அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தியா 564/8 என்ற நிலையில் டிக்ளேர் செய்தது. ஆப்கான் தரப்பில் முகமது சலீம் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்; ஷரிப், ஹஸ்மதுல்லா தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆப்கான் அணி ஆரம்பத்திலேயே அப்துல் மாலிக் (16) விக்கெட்டை இழந்து தடுமாற்றம் கண்டது.