டெஹ்ரான்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ‘பகல் கனவு’ காண்பதை நிறுத்தி, யதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கடுமையாக விமர்சித்துள்ளார். ஈரானின் புதிய உச்ச தலைவரை சந்திப்பது குறித்து வெளியான பேச்சுகளையும் அவர் நிராகரித்தார்.
சமீபத்தில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், ஈரானுடன் நிரந்தர அமைதி ஒப்பந்தம் ஏற்படும் பட்சத்தில், அந்நாட்டின் புதிய உச்ச தலைவரை சந்திப்பதில் தயக்கம் இல்லை என கூறினார். இது தனிப்பட்ட விருப்பமல்ல; இரு நாடுகளுக்கும் இடையே சுமுகமான ஒப்பந்தம் அமையுமானால் சந்திப்பதை பெருமையாகக் கருதுவேன் என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த அராக்சி, அத்தகைய சந்திப்பிற்கான வாய்ப்பை அடியோடு மறுத்தார். பேச்சுவார்த்தைகளில் இதுவரை உருப்படியான முன்னேற்றம் இல்லை என்றாலும், மத்தியஸ்தர்கள் மூலம் இரு தரப்பும் தொடர்ந்து தகவல்களைப் பரிமாறிக் கொண்டிருக்கின்றன என அவர் கூறினார்.
மேலும், தற்போதைய போர் சூழல் மற்றும் பாதுகாப்பு காரணங்களால் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி இன்னும் பொதுவெளியில் தோன்றவில்லை என்றும், நாட்டின் முக்கிய முடிவுகளை அவர் முன்னின்று கவனித்து வருகிறார் என்றும் அராக்சி விளக்கினார்.
அறிக்கையில் கூறப்பட்டதன்படி, கடந்த பிப். 28 அன்று அமெரிக்கா–இஸ்ரேல் கூட்டுப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து மார்ச் மாதத்தில் அவரது மகன் மொஜ்தபா கமேனி புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றார்.





