பியாங்யாங்: வடகொரியாவின் முன்னணி பாதுகாப்புத் தளவாட உற்பத்தி நிறுவனத்திற்கு, ஏவுகணை உற்பத்தித் திறனை 2.5 மடங்கு உயர்த்துமாறு அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளதாக அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

ஆளும் தொழிலாளர் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான ரோடாங் சின்முன் வெளியிட்ட செய்தியின்படி, கிம் ஒரு முக்கிய பாதுகாப்புத் தளவாட உற்பத்தி ஆலையை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அடுத்த ஐந்து ஆண்டுகளில் பாலிஸ்டிக் மற்றும் குரூஸ் ஏவுகணைகள் தயாரிக்கும் திறனை விரிவுபடுத்த வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

உற்பத்தித் திறன் உயர்வுக்கான திட்டங்கள் அடங்கிய அறிக்கை ஆய்வின்போது கிம்மிடம் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ஏவுகணைகளுக்கான தேவை கடுமையாக உயர்ந்துள்ளதாகக் குறிப்பிட்ட கிம், அதற்கேற்ப உற்பத்தியை விரிவாக்க வேண்டும் என்றார். மேலும், விரைவில் நடைபெறவுள்ள 9வது மத்தியக் குழு கூட்டத்தில் உற்பத்தி விரிவாக்கம் தொடர்பான முன்மொழிவை சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.