சர்வதேச பொருளாதார நிச்சயமற்ற சூழல் நீடிக்கும் நிலையில், சீர்திருத்த நடவடிக்கைகளை வேகப்படுத்தவும் நிர்வாக செயல்திறனை உயர்த்தவும் மத்திய அமைச்சரவையில் மறுசீரமைப்பு செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்னும் சில வாரங்களில் மாற்றம் நிகழக்கூடும் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பதவியேற்று 2024 ஜூன் 9 அன்று தற்போதைய அமைச்சரவையுடன் பொறுப்பேற்றார். இதுவரை அமைச்சரவை மாற்றம் நடக்காத நிலையில், தற்போதைய சூழலில் செயல்திறன் அடிப்படையிலான மறுசீரமைப்பு தவிர்க்க முடியாததாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த மாற்றத்தில் ரயில்வே, நிதி உள்ளிட்ட 10 முதல் 12 முக்கிய அமைச்சகங்களில் மாற்றங்கள் இருக்கலாம். சில அமைச்சர்கள் நீக்கப்படலாம்; சிலரின் இலாகாக்கள் மாற்றப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த ஆண்டு உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், கோவா, மணிப்பூர், ஹிமாச்சல பிரதேசம், குஜராத் ஆகிய ஏழு மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளதால், அமைச்சரவை மாற்றத்தின் நேரம் தேர்தல் கணக்கிலும் பார்க்கப்படுகிறது. யார் வெளியே, யார் உள்ளே என்பது தற்போது யூகங்களாகவே உள்ள நிலையில், இறுதி முடிவு பிரதமரும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் மட்டுமே அறிவர் என கூறப்படுகிறது.

ரயில்வே, செய்தி மற்றும் ஒலிபரப்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளை கவனிக்கும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மீது கவனம் செல்லலாம் என்றும், அவர் ஒரு துறையைத் தக்கவைக்கலாம் அல்லது வேறு துறைக்கு மாற்றப்படலாம் என்றும் பேசப்படுகிறது. ‘ஜி-20’ மாநாட்டின் ஒருங்கிணைப்பில் முக்கிய பங்காற்றிய முன்னாள் வெளியுறவு செயலர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா சமீபத்தில் ராஜ்ய சபா உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதால், அமைச்சரவையில் இடம் பெற வாய்ப்பு அதிகம் எனவும் கூறப்படுகிறது.

மேலும், ‘நீட்’ வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்து கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை நீக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் அழுத்தம் தருகின்றன; இதனால் அவரது பதவி பாதிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், பா.ஜ.க.வின் “ஒருவருக்கு ஒரு பதவி” கொள்கை மற்றும் கட்சியின் அமைப்பு மாற்றங்கள் காரணமாக புதிய முகங்களுக்கு வாய்ப்பு உருவாகலாம்; 40–50 வயதுக்குட்பட்ட இளம் தலைவர்களுக்கு அதிக இடம் வழங்கவும், 70 வயதுக்கு மேற்பட்ட சில மூத்த அமைச்சர்களை கட்சி பொறுப்புகளுக்கு மாற்றவும் வாய்ப்பு உள்ளது என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

மேலும், தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள ஜே.டி.(யு), தெலுங்கு தேசம், தேசியவாத காங்கிரஸ் போன்ற கூட்டணி கட்சிகள் அதிக பிரதிநிதித்துவம் கோருவதால், அவர்களுக்கும் கேபினட் நிலை வாய்ப்புகள் அதிகரிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.