சென்னை: பா.ஜ.க.வில் இருந்து விலகிய அண்ணாமலை தொடங்கிய புதிய இயக்கத்தை நம்பி யாரும் ஏமாந்து செல்ல வேண்டாம் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் கேட்டுக்கொண்டார்.
பேட்டியில் அவர், அண்ணாமலை தனி இயக்கத்தை ஆரம்பித்ததையடுத்து சில பொறுப்பாளர்கள் மற்றும் பல அடிமட்ட பொறுப்பாளர்கள் அங்கு சென்றுள்ளதாக கூறினார். அந்த இயக்கம் பிரதமர் நரேந்திர மோடியின் ஆசியுடன் தொடங்கப்படுவதாக கூறி சிலரை பாதிப்பில் ஆழ்த்துவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
ஆனால், பிரதமர் மோடியோ, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவோ, தேசிய தலைவர்களோ எந்த இயக்கத்திற்கும் ஆசி வழங்கவில்லை என்று நயினார் தெரிவித்தார். அண்ணாமலை இயக்கத்தில் இருப்பவர்கள் பா.ஜ.க. தொண்டர்களாக இருக்க முடியாது என்றும், பா.ஜ.க. உறுப்பினர்கள் கட்சிக்குள் மட்டுமே செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
கட்சிக்கு எந்த பின்னடைவும் ஏற்படாது; பா.ஜ.க. பெரிய கட்சி என்றும், மோடியின் வழியில் தமிழகமும் தேசியமும் இயங்குகின்றன என்றும் அவர் கூறினார். கட்சியை விட்டு சென்றவர்கள் மீண்டும் திரும்பி சேரலாம்; அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படாது என்றும், சமீபத்திய சட்டசபை தேர்தலில் குறைந்த இடங்களில் போட்டியிட்டு அதிக வாக்குகளை பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையே, தமிழக பா.ஜ.க. துணை தலைவர் ஏ.ஜி.சம்பத் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.





