சென்னை
காங்கிரஸ் தொடர்பான விவகாரத்தில் திமுகக்கு “இப்போதுதான் அறிவு வந்திருக்கிறது” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் பேசியபோது தெரிவித்தார்.
தான் மிக இளம் வயதில் கட்சி தொடங்கி 16 ஆண்டுகளாக போராடி வருவதாக கூறிய சீமான், நாம் தமிழர் கட்சி வளரக் கூடாது என்று சிலர் நினைப்பதாக குற்றம்சாட்டினார். தனது வெற்றியை தள்ளிப் போடலாம்; ஆனால் தடுத்து நிறுத்த முடியாது என்றும் அவர் கூறினார்.
கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை குறிப்பிட்ட அவர், அந்தச் சம்பவத்திற்கு சிறுமியின் தாயின் குடிப்பழக்கத்தை காரணமாகச் சொல்வதை கேள்விக்குள்ளாக்கினார். அந்தத் தாயை குடிக்கும் நிலைக்கு தள்ளியது யார் என்றும் அவர் கேட்டார்.
கூட்டணி அரசியல் குறித்து பேசிய சீமான், தமிழகத்தில் காங்கிரஸ் எம்பிக்கள் திமுக ஆதரவில்தான் இருப்பதாக விமர்சித்தார். எம்பி பதவியை ராஜினாமா செய்து தவெக கூட்டணியில் நின்று இடைத்தேர்தலில் வென்று காட்டுங்கள் என்று காங்கிரஸுக்கு சவால் விடுத்தார்.
மேலும், ராஜ்யசபா சீட்கள் பெறுவதற்காக கட்சி கட்சியாக “தட்டேந்தி” கேட்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். தன் பேச்சுகளை ஊடகங்கள் செய்தியாக வெளியிடாமல், நடிகர்-அரசியல்வாதி விஜயின் வருகை-போகை போன்றவற்றுக்கு அதிக முக்கியத்துவம் தருவதாகவும், ஊடக பார்வையில் தங்களை “தீண்டத்தகாதவர்கள்” போல நடத்துகிறார்கள் என்றும் சீமான் கூறினார்.





