கடந்த லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களுக்கு முன்பாக, ம.தி.மு.க. முதன்மை செயலர் துரை வைகோவின் செயல்பாடுகள் குறித்து கட்சிக்குள் எதிர்ப்பு எழுந்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து முன்னாள் மாநில நிர்வாகி பொடா அழகு சுந்தரம், முன்னாள் மாவட்ட செயலர்கள் சண்முகசுந்தரம், புலவர் செவந்தியப்பன், டி.ஆர்.ஆர். செங்குட்டுவன், முன்னாள் அவைத்தலைவர் எஸ். துரைசாமி உள்ளிட்ட 12 பேர் ம.தி.மு.க.விலிருந்து விலகி அதிருப்தியாளர்களாக உள்ளனர்.
மேலும், துணை பொதுச்செயலராக இருந்த மல்லை சத்யாவும் கட்சியை விட்டு வெளியேறி, ‘திராவிட வெற்றிக்கழகம்’ என்ற தனிக்கட்சியை நடத்தி வருகிறார்.
சட்டசபை தேர்தலுக்கு முன் அந்த 12 பேரும் தி.மு.க.வில் இணைய விருப்பம் தெரிவித்து கடிதம் அளித்திருந்தனர். ஆனால் அவர்களை சேர்த்தால் ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ வருத்தப்படுவார் என்ற காரணத்தால், தி.மு.க. தரப்பு அவர்களை உடனடியாக இணைக்காமல் ‘காத்திருப்போர்’ பட்டியலில் வைத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், வரும் 27-ஆம் தேதி நடைபெறும் ம.தி.மு.க. பொதுக்குழுவில் இனி தனி சின்னத்தில் போட்டியிடும் தீர்மானத்தை நிறைவேற்றப் போவதாக துரை வைகோ அறிவித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, ம.தி.மு.க. தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியேறும் முடிவை எடுத்தால், அந்த அதிருப்தியாளர்களை தி.மு.க.வில் சேர்க்க ஸ்டாலின் தரப்பில் பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளதாக சில தி.மு.க. நிர்வாகிகள் தெரிவித்தனர்.




