உலகளாவிய உற்பத்தி மையமாக தமிழகம் வளர்ந்து வரும் நிலையில், விமானப் போக்குவரத்து துறையில் உள்ள நிர்வாக சிக்கல்கள் விமான நிலைய வளர்ச்சிக்கு தடையாக இருப்பதாக வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகியவை சர்வதேச விமான நிலையங்களாகவும், சேலம் மற்றும் தூத்துக்குடி உள்நாட்டு விமான நிலையங்களாகவும் செயல்படுகின்றன. இவை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், புதிய விமான நிலையம் அமைப்பதில் நிலம் கையகப்படுத்தல் போன்ற முக்கிய பணிகளில் மாநில அரசின் பங்கு தீர்மானிப்பதாக கூறப்படுகிறது.
விமான நிலைய ஆணையம் (AAI) நிலம் தொடர்பாக மாநில அரசிடம் வைக்கும் கோரிக்கைகள் நீண்ட கால இழுபறிக்குப் பிறகே நிறைவேறுவதால், பயணியர் போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடுகள் மந்தமாகின்றன என விமானத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆந்திரா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் தனி வாரியம் அமைத்து விமானத் துறையை முன்னெடுத்ததால் முதலீடுகளிலும் வளர்ச்சி ஏற்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
தமிழகத்தில் தற்போது நிலம் கையகப்படுத்தல் உள்ளிட்ட பணிகளை தொழில் மேம்பாட்டு கழகமான டிட்கோ மேற்கொள்கிறது. ஆனால், தனித்துறை அதிகாரம் இல்லாததால் பரந்தூர், ஓசூர் பகுதிகளில் விமான நிலையம் தொடர்பான பணிகள் முன்னேறாமல் உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பில் தமிழகம் முன்னேறி வருவதால், தரைவழியை விட விமான சரக்கு போக்குவரத்து முக்கியம் என வல்லுநர்கள் வலியுறுத்தினர். ஏஏஐ-யுடன் இணைந்து செயல்படும் வகையில் ஒரு தனி வாரியத்தை உருவாக்கி, ‘தமிழ்நாடு விமான நிலைய மேம்பாட்டுக் கழகம்’ போன்ற அமைப்பை உருவாக்கினால், அனுமதிகள் எளிதாகி, எம்.ஆர்.ஓ. போன்ற விமானத் துறை சார்ந்த வேலைவாய்ப்புகளும் உருவாகி, மாநில பொருளாதார வளர்ச்சிக்கும் துணை நிற்கும் என அவர்கள் தெரிவித்தனர்.




