சென்னை: ‘சூப்பர் எல் நினோ’வின் ஆரம்ப கட்டம் தொடங்கியுள்ளதாக வானிலை நிபுணர்கள் எச்சரித்துள்ள நிலையில், தமிழகத்தில் காலநிலை சார்ந்த பாதிப்புகளை எதிர்கொள்ள முன்தயார்ச்சி அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, தன்னார்வ வானிலை ஆய்வாளர் ஹேமசந்தர், வறட்சி மற்றும் பேரிடர் மேலாண்மை சிறப்பு குழுவை அமைக்க தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

பசிபிக் பெருங்கடலின் கிழக்கு மற்றும் மத்திய பகுதிகளில் கடல் வெப்பநிலை இயல்பை விட சுமார் 1.5 டிகிரி செல்ஷியஸ் அதிகரிப்பது ‘எல் நினோ’ எனவும், அதே அளவு குறைவது ‘லா நினா’ எனவும் வகைப்படுத்தப்படுகிறது. கடல் வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்ஷியஸ் வரை உயர்வதால் ஏற்படும் வலுவான நிகழ்வை ‘சூப்பர் எல் நினோ’ என குறிப்பிடுகின்றனர்.

உலகின் பல பகுதிகளில் பெருமழை, வறட்சி போன்ற தீவிர காலநிலை மாற்றங்கள் ஏற்படலாம் என உலக வானிலை அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக அவர் கூறினார். ‘சூப்பர் எல் நினோ 2026’ உலகளவில் பெரிய காலநிலை அச்சுறுத்தலாக உருவெடுத்து வருவதாகவும், அதன் ஆரம்ப தாக்கங்கள் ஏற்கனவே உணரத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்திய அளவில் தென்மேற்கு பருவமழை இயல்புக்கு குறைவாகவும், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்புக்கு அதிகமாகவும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார். மேலும், 2027 மார்ச் முதல் ஜூன் வரை தமிழகத்தைச் சேர்த்து இந்தியாவில் கடுமையான வெப்ப அலைகள் நிலவும் வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரித்தார்.

அடுத்த 12 முதல் 18 மாதங்களில் வறட்சி, வெப்ப அலைகள், பருவமழை மாற்றங்கள், பெருமழை, வெள்ளப்பெருக்கு, விவசாய பாதிப்பு உள்ளிட்ட பேரிடர் சூழல்கள் அதிக வாய்ப்புடன் உருவாகலாம் என அவர் கூறினார். இதை முன்கூட்டியே எதிர்கொள்ள, நீர் மேலாண்மை, விவசாய பாதுகாப்பு, குடிநீர் தட்டுப்பாடு தீர்வு, பெருமழை–வெள்ள முன்னெச்சரிக்கை உள்ளிட்ட நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் வகையில் உடனடியாக சிறப்பு குழுவை அமைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.