சென்னை: திருப்பரங்குன்றம் மலையில் இந்த ஆண்டு கார்த்திகை தீபம் ஏற்றப்படும் என ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் தெரிவித்தார். இது வரலாற்று, ஆன்மிக மரபுகளை மீட்டெடுக்கும் உரிமை என்றும் அவர் கூறினார்.

தீபம் ஏற்றும் கோரிக்கை எந்த மதத்தினருக்கும் எதிரானது அல்ல என்று விளக்கிய அவர், இதை “சதி திட்டம்” என சித்தரிப்பது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் கற்பனை என குற்றம்சாட்டினார். மேலும், மனுவில் சிக்கந்தர் தர்காவை அகற்ற வேண்டும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் உயர் நீதிமன்ற இரு நபர் அமர்வு தீபம் ஏற்ற அனுமதித்து தீர்ப்பளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். உண்மைகளை திரித்து பேசுவதாகக் கூறி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் வீரபாண்டியன் மீது நீதிமன்றம் தானாக முன்வந்து அவமதிப்பு வழக்கு தொடங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

மேலும், “இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நடைமுறையே தொடரும்” என சட்ட அமைச்சர் நிர்மல் குமார் கூறியதாகச் சொல்லப்படும் கருத்தை அவர் விமர்சித்தார். வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் இப்படிப் பேசுவது நீதிமன்றத்தின் சுயாதீனத்தை கேள்விக்குள்ளாக்கும் என்றும், அமைச்சர் அந்த கருத்தைத் திரும்பப் பெற்று பொது வெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.