மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியின் தனி உதவியாளராக இருந்த சந்திரநாத் ராத் கொலை வழக்கில் மேலும் இரு சந்தேகநபர்களை சி.பி.ஐ. கைது செய்துள்ளது.

கடந்த மாதம் 6ம் தேதி, வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் மத்தியகிராம் பகுதியில் ஒரு கும்பல் ராத்தை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

முதலில் போலீசார் வழக்கு பதிவு செய்து, கூலிப் படையைச் சேர்ந்த மூன்று பேரை கைது செய்தனர். பின்னர் விசாரணை சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கின் முக்கிய குற்றவாளி என கூறப்படும் ‘மோனு’ என்பவர், உத்தர பிரதேசத்தின் பாலியாவில் உள்ள குண்டர் தடுப்பு சட்ட நீதிமன்றத்தில் சமீபத்தில் சரணடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்மீது 12 குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, லக்னோவைச் சேர்ந்த விகாஸ் மிஸ்ரா மற்றும் பாலியாவைச் சேர்ந்த கொலு சிங் ஆகிய இருவரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.