நிடி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு முதல்வர் விஜய் ஜூன் 10ஆம் தேதி டில்லி செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் தலைமையில் ஜூன் 11ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார்.
முதல்வராக மே 10ஆம் தேதி பொறுப்பேற்ற விஜய், மே 27ஆம் தேதி முதல் முறையாக டில்லி சென்றார். அப்போது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார்; ஆனால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க முடியாமல் சென்னை திரும்பினார்.
வரும் நிடி ஆயோக் கூட்டத்தை முன்னிட்டு, மத்திய பா.ஜ.க. அரசு வட்டாரங்களுக்கு நெருக்கமான நபர்களை சந்தித்து, தமிழ்நாட்டின் தேவைகளுக்கான நிதி பெறுவது குறித்து பேச திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க நேரம் கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இம்முறை முதல்வருடன் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளும் தனி விமானத்தில் பயணம் செய்யலாம் என தகவல். முந்தைய பயணத்தில் உதவியாளர், அரசியல் ஆலோசகர் மற்றும் சிகை அலங்கார நிபுணர்கள் மட்டுமே உடன் சென்றதாக கூறப்பட்டதால் விமர்சனங்கள் எழுந்தன.





