ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் உள்ள பிரசாந்தி நிலையம் சென்ற வெனிசுலா நாட்டின் இடைக்கால அதிபர் டெல்சி எலோய்னா ரோட்ரிக்ஸ், ஸ்ரீ சத்ய சாய்பாபா சன்னிதியில் வழிபாடு மேற்கொண்டார்.
‘அமைதியின் உயர்ந்த கோவில்’ என அறியப்படும் இந்த ஆன்மிக மையத்திற்கு உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்தியாவிற்கு ஐந்து நாள் அரசு முறை பயணமாக வந்திருந்த நிலையில், அவர் புட்டபர்த்தி சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்தில் ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.ஜே. ரத்னாகர், அறக்கட்டளை உறுப்பினர் மனோகர் ஷெட்டி உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர்.
ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளை வெளியிட்ட அறிக்கையின்படி, ரோட்ரிக்ஸ் சிறப்பு பஜனைகள் மற்றும் பிரார்த்தனை நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். மங்கள ஆரத்திக்குப் பிறகு சில நேரம் அமைதியாக தியானத்தில் ஈடுபட்டார்.
பின்னர் அறக்கட்டளை நிர்வாகிகளுடன் அவர் கலந்துரையாடினார். அறக்கட்டளை சார்பில் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் புகைப்படம் அடங்கிய நினைவுப்பரிசும் வழங்கப்பட்டது. மேலும், அன்பு, அமைதி, தன்னலமற்ற சேவை என்ற சாய்பாபாவின் செய்தியில் ஈடுபாடு கொண்ட அவர் இதற்கு முன்பும் பிரசாந்தி நிலையத்திற்கு வந்துள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.





