சென்னை: சட்டசபை தேர்தல் தோல்விக்குப் பிறகு, தி.மு.க. கட்சி தலைவர் மு.க. ஸ்டாலினை சந்திப்பதை விட, உதயநிதி ஸ்டாலினை முதலில் சந்திக்க சில நிர்வாகிகள் ஆர்வம் காட்டுவதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
கருணாநிதி உயிருடன் இருந்த காலத்தில் கட்சி பல கடுமையான தோல்விகளை சந்தித்தாலும், அவர் தினசரி அண்ணா அறிவாலயத்திற்கு வந்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் சந்திக்க வாய்ப்பு அளித்ததாக அவர்கள் நினைவூட்டினர். ஆனால் ஸ்டாலின் முதல்வரான பிறகு அறிவாலயத்திற்கு வருவது குறைந்தது; கட்சி தொண்டர்களுடன் தொடர்பு தளர்ந்ததாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
மேலும், தேர்தல் தோல்வியுடன் சேர்ந்து கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் தோல்வியடைந்ததும் கட்சிக்குள் அதிர்வை ஏற்படுத்தியதாக அவர்கள் கூறினர். அதன் பின்னர் ஸ்டாலின் தினமும் அறிவாலயத்திற்கு வரத் தொடங்கினாலும், தோல்வி மனநிலையில் உள்ளவரை சந்தித்து மேலும் மனவருத்தம் ஏற்படுத்த வேண்டாம் என்ற எண்ணத்தில் பலர் வராமல் இருப்பதாகவும் தெரிவித்தனர்.
தோல்வி குறித்து பேச முயன்றால், தோல்வியை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவிடம் கூறுமாறு ஸ்டாலின் தெரிவிப்பதாகவும் அவர்கள் கூறினர். இன்னும் சில ஆண்டுகளில் உதயநிதி கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு வரக்கூடும் என்ற நம்பிக்கையுடன், அவர் தற்போது கட்சியினரை அதிகமாக சந்திக்கத் தொடங்கியதால், சில நிர்வாகிகள் முதலில் அவரது இல்லத்திற்குச் சென்று சந்தித்து, நேரமிருந்தால் மட்டுமே ஸ்டாலினை பார்க்க அனுமதி கேட்கிறார்கள். இந்த மாற்றம், ஏற்கனவே தோல்வி வருத்தத்தில் உள்ள ஸ்டாலினுக்கு பெரிய அதிர்ச்சியாக இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.





