சென்னை: பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு சில பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் பாடம் நடத்தாமல் இருப்பதால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கக்கூடும் என்ற கவலை எழுந்துள்ளது.

தலைமை ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், தமிழக கல்வி விதிகளின்படி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் வாரத்திற்கு 10 பாடவேளைகள், உதவி தலைமை ஆசிரியர்கள் 20 பாடவேளைகள் கையாள வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது. மேலும், பிற ஆசிரியர்கள் பாடம் நடத்தும் தரத்தை உறுதி செய்ய மாதத்திற்கு தலா 20 பாடவேளைகளை கண்காணித்து, மொபைல் செயலியில் பதிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தனர். மற்ற ஆசிரியர்களுக்கு வாரத்திற்கு 28 பாடவேளைகள் ஒதுக்கப்பட வேண்டும் எனவும் கூறினர்.

ஆனால், அரசு வழங்கிய தலைமை ஆசிரியர் கையேட்டில் உதவி தலைமை ஆசிரியருக்கு வாரத்திற்கு 14 பாடவேளைகள் மட்டுமே ஒதுக்க வேண்டும்; மீதியிலான நேரத்தில் தலைமை ஆசிரியருடன் இணைந்து நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டினர். விதிகளில் 20 என்றும், கையேட்டில் 14 என்றும் இருப்பதால் பணிச்சுமை ஒதுக்கீட்டில் முரண்பாடு உருவாகிறது என தெரிவித்தனர்.

தலைமை ஆசிரியர் மற்றும் உதவி தலைமை ஆசிரியர் இருவரும் அலுவலகப் பணிகளையும் கவனிக்க வேண்டியதால், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பாடவேளைகளில் வகுப்புகள் நடத்துவது சிரமமாகிறது என்றும் கூறினர். அதே நேரத்தில், அந்த பாடங்களுக்கு மாற்று ஆசிரியர்களும் நியமிக்கப்படாததால் மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.

மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களை அரசு நியமிக்க வேண்டும்; அப்போதுதான் நிர்வாகமும் கற்பித்தலும் பாதிக்காமல் நடைபெறும் என அவர்கள் வலியுறுத்தினர்.