புதுடில்லியில் இண்டி எதிர்க்கட்சிக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதில் 23 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். தமிழகத்திலிருந்து விசிக, மதிமுக கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, சோனியா காந்தி, கே.சி. வேணுகோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி மற்றும் கட்சி நிர்வாகி அபிஷேக் பானர்ஜியும் கூட்டத்தில் இருந்தனர்.

மேலும் மக்கள் ஜனநாயக கட்சியின் மெகபூபா முப்தி, ஆர்ஜேடியின் தேஜஸ்வி யாதவ், சரத் பவார் அணியின் தேசியவாத காங்கிரஸின் சுப்ரியா சூலே, தேசிய மாநாட்டு கட்சியின் ஒமர் அப்துல்லா, மார்க்சிஸ்ட் கட்சியின் ஜான் பிரிட்டாஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா ஆகியோரும் கலந்து கொண்டனர். உத்தவ் தாக்கரே, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்களும் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டது.

தமிழக சட்டசபை தேர்தல் முடிந்த பின்னர் தவெக அரசில் காங்கிரஸ் இணைந்ததைத் தொடர்ந்து அதிருப்தியடைந்த திமுக, இண்டி கூட்டணி கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்திருந்தது. லோக்சபா தேர்தலுக்குப் பிறகு கூட்டணியிலிருந்து விலகிய ஆம் ஆத்மி கட்சியும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

கூட்டத்தில் 2029 லோக்சபா தேர்தலை முன்னிட்டு எதிர்கால செயல்திட்டம், பாஜ தலைமையிலான அரசை எதிர்கொள்ளும் கூட்டு வியூகம் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடைபெறுகிறது. கூட்டணிக்குள் உள்ள கருத்து வேறுபாடுகளுக்கு தீர்வு காணும் முயற்சிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக கூறப்படுகிறது.