புதுடில்லி: வினாத்தாள் கசிவைத் தொடர்ந்து நீட் மறு தேர்வு நடைபெற உள்ள நிலையில், வினாத்தாள் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்ட அனைவரையும் பாதுகாப்பான ரகசிய இடத்தில் தங்க வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கடந்த மாதம் நடந்த நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக கூறப்பட்டதை அடுத்து, தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனால் தேர்வு எழுதிய சுமார் 22 லட்சம் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது; முக்கிய குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மறு தேர்வு ஜூன் 21-ம் தேதி நடைபெற உள்ளது.
மறு தேர்வில் எந்த சிக்கலும் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக, வினாத்தாள் தயாரிப்பு குழுவினருக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மொபைல், லேப்டாப் உள்ளிட்ட தனிப்பட்ட தொடர்பு சாதனங்கள் பயன்படுத்துவதும், இணைய அணுகலும், வெளிநபர்களுடன் தொடர்பு கொள்ளுவதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அவர்கள் தங்கியுள்ள இடத்திற்குள் நுழைவு-வெளியேற்றம் தீவிரமாக கண்காணிக்கப்படுவதுடன், விவரங்கள் பதிவு செய்யப்படுகின்றன. அங்கீகாரம் பெற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்; ஸ்மார்ட் வாட்ச் போன்ற நவீன டிஜிட்டல் சாதனங்களுக்கும் அனுமதி இல்லை. ஜூன் 21-ம் தேதி தேர்வு முடியும் வரை அவர்கள் அங்கேயே தங்க வைக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





